உரக்கச் சொல்லாத உண்மைகள்.
சொல்லும் உண்மைகள் உரைக்கும்!_____________________________________
ஒரே தலைவலி. மருந்துக் கடைக்குச் சென்றேன்.
மருந்துக் கடையிலிருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை 'ஸ்டிரிப்' ஒன்றைத் தந்தான்.
உனது ‘ஓனர்’ எங்கே என்று கேட்டேன்.
அவருக்குச் சரியான தலைவலி. அதோ அந்தக் காப்பிக் கடையில் காப்பி சாப்பிடப் போயிருக்கிறார் என்றான் அவன்!
என் கையிலிருந்த தலைவலி மாத்திரை 'ஸ்டிரிப்' என்னைப் பார்த்து ‘ஙே’ என்று விழித்தது!
அம்மாவுக்கு பிபியும் (BP) ஷுகரும் ஏறி விட்டது. ஆகவே அலறி அடித்துக் கொண்டு மருத்துவரைப் பார்க்கக் காலையிலேயே அம்மாவுடன் கிளம்பினேன்.
மருத்துவர் யோகா செய்து கொண்டிருந்தார். முக்கால் மணி நேரம் காத்திருந்தோம்.
அம்மாவை 'செக்' பண்ணிப் பார்த்த மருத்துவர் மருந்துகளை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்த வேண்டும் என்றும் வேளாவேளைக்குச் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
அவர் எழுதித் தந்த அதிகப்படியான 5, 6 மாத்திரைகள் கொண்ட சீட்டை வாங்கிக் கொண்டேன்.
ஒரு ஆவல் உந்த, “டாக்டர், நீங்கள் யோகா செய்கிறீர்களா?” என்று கேட்டேன்.
15 வருடமாகச் செய்து வருவதாகவும் அதனால் தான் பிபி, ஷுகர் இல்லாத ஆரோக்கிய வாழ்வைக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
பிபி, ஷுகரைக் குறைக்க அவர் எழுதித் தந்த நீண்ட மாத்திரை சீட்டைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று என்னைப் பார்த்து விழித்தது.
மனைவியின் தலைமுடி கோரமாக ஆகிக் கொண்டிருப்பதாக அவளுக்கு ஒரு உணர்வு.
"சரி, வா 'பியூட்டி பார்லர்' போவோம்!" என்றேன்.
நமது நலனைக் கருதி பல்வேறு பேக்கேஜ்கள் நமக்கு உகந்ததாக இருப்பதாக ரிஸப்ஷனிஸ்ட் அன்புடன் சொன்னாள்.
1200 ரூபாயில் ஆரம்பம். 3000 ரூபாய் வரை போகிறது பட்டியல்.
பேரம் பேசி 3000 ரூபாய் பேக்கேஜை 2400'க்கு முடித்தேன். அட, என்னே என் சாமர்த்தியம் !!
மனைவியின் கேசத்தைக் கோதி விட்டுக் கொண்டிருந்த பெண்மணியின் தலை முடி அழகாக இருந்ததோடு, கமகமவென ஒரு நறுமணமும் அதிலிருந்து வந்தது.
‘அட, நல்ல வாசனையாக இருக்கிறதே’, என்று அவளைப் பாராட்டினேன்.
அவள் நன்றி தெரிவித்ததோடு, காலம் காலமாக அனைவரும் உபயோகித்து வரும் சம்பிரதாயமான எண்ணெய்யை, சூடத்தைக் கலந்து உபயோகித்து வருவதாகவும், அதனால் முடி நீண்டு அழகாக இருப்பதாகவும் தெரிவித்தாள்.
2400 ரூபாய்க்குப் பேரம் பேசிய என்னைப் பார்த்து என் மனைவி விழிக்க அவளைப் பார்த்து நான் விழித்தேன்.
நெருங்கிய உறவினருக்குப் பெரிய பண்ணை ஒன்று உண்டு.
அதில் அயல்நாட்டுக் கறவைப் பசுக்கள் 150 ஐ அவர் வளர்த்து வந்தார்.
அவை தரும் பாலைக் கறந்து எடுத்து இயந்திரங்களில் வைத்துப் பாதுகாத்து வெளிச் சந்தையில் நல்ல விலைக்கு அவர் விற்று வந்தார்.
அதே பண்ணையில் தொலைவில் இரண்டு நமது உள்ளூர் பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன.
"அது எதற்காக", என்று கேட்டேன்.
அது குடும்பத்தினரின் உபயோகத்திற்குத் தேவைப்படும் நெய், பால் ஆகியவற்றிற்காக வளர்க்கப்படுவதாகவும் அதைத் தவிர வேறு எந்த நெய், பாலையும் தங்கள் குடும்பத்தினர் உபயோகிப்பதில்லை என்றும் அவர் சொன்னார்.
பிராண்டட் மில்க் சாப்பிடுவோரை நினைத்துக் கொண்டே நமது தேசீயப் பசுக்களைக் கையெடுத்துக் கும்பிட்டேன்.
ஒருநாள் மதிய உணவிற்குப் புகழ் பெற்ற உணவு விடுதிக்குக் குடும்பத்தோடு சென்றேன்.
சாப்பிட்டு முடிந்தவுடன் பில்லை நீட்டிய மேலாளர், “சாப்பாடு எப்படிச் சார் இருந்தது? பசு நெய், சுத்தமான ஆயில், பாஸ்மதி அரிசி மட்டும் தான் நாங்கள் உபயோகிக்கிறோம். அடிக்கடி வாருங்கள்” என்று சொன்னார்.
அத்துடன் தன் 'கேபினு'க்கு அழைத்து தனது 'விஸிடிங் கார்டை'யும் கொடுத்தார்.
அங்கிருந்த 'டிபன் கேரியரை' நான் பார்த்தேன். அப்போது ஹோட்டல் பணியாளர்கள் இருவர் தங்களுக்குள் பேசிக் கொண்டதையும் கேட்டேன்.
“சுனில், சாரோட 'டிபன் பாக்ஸை' எடுத்து தனியே வை. அவர் சாப்பிட வர இன்னும் பத்து நிமிடமாகும்”
அவரைப் பார்த்து நான் கேட்டேன், “ஏன், உங்கள் சார் இந்த ஹோட்டலிலேயே சாப்பிட மாட்டாரா?”
“ஊஹூம்! ஒருபோதும் சாப்பிட மாட்டார். அவருக்கு வீட்டுச் சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும்!”
என் கையிலிருந்த 1670 ரூபாய் பில்லைப் பார்த்தேன்.
அது ‘ஙே’ என்று விழித்தது.
அடடா, இது மாதிரி எனக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டு விட்டன.
சில சமயம் சிரிப்பாய் இருக்கிறது;
சில சமயம் சிந்திக்கவும் வைக்கிறது!
இந்த 'மல்டி நேஷனல் கம்பெனி'களால் உருவாக்கப்பட்டு வாழ்கையை நடத்துபவர்களாக நாம் ஆகி விட்டோமா என்று தோன்றுகிறது.
நம்மை 'ஏடிஎம்' இயந்திரமாக அவர்கள் ஆக்கி விட்டார்கள்.
தேவைப்படும் போது நம்மிடமிருந்து பணத்தைப் பெருமளவில் கறக்கிறார்கள்.
இதில் ரகசியம் என்னவென்றால், அவர்கள் விற்கும் பொருள்களை அவர்கள் ஒரு நாளும் நுகர்வதில்லை;
அவர்கள் குடும்பத்தினருக்கோ அதைக் காண்பிப்பது கூட இல்லை.
நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தோமானால்...
நமக்குச் செலவுக்குச் செலவும் மிச்சம்;
ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் நிலைத்து நீடித்திருக்கும்!
_____________________________________
ஆம்... சொல்லும் உண்மைகள் உரைக்கும்!
- படித்தபோது.. உரைத்தது... -
No comments:
Post a Comment