Thursday, February 24, 2022

வந்தார் வள்ளுவர்

 MM DECEMBER 2001

வந்தார் வள்ளுவர்
எங்கள் பள்ளியில் ஆண்டு விழா, கண்டிப்பாக நீங்கள் வர வேண்டுமென்ற அழைப்பை ஏற்று சரி சாயங்காலம் ஒரு நடை போய் வருவோம். சிறுவர்கள் ஆடிப்பாடும் பொழுது நாம் ஆடின ஆட்டங்களை நினைத்து சற்று நேரம் சந்தோஷப் படலாமே என்று பள்ளியை நோக்கி நடையைப் போட்டேன்.
பரிசுகள் கொடுத்து முடிந்ததும் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. திரை விலகியது. முதலிலேயே துள்ளல் பாட்டு, ஒரே சப்தம், சப்தத்திற்குப் பெயர் இசை.
இது என்னடா, காலம் இப்படியாகி விட்டதே. ஒரு அர்த்தமுள்ள நாடகம், பெற்றோர் களுக்குக் கருத்துகள் சொல்லுவது போல ஒன்றையும் காணோமே... இருக்கவா, இல்லை போகவா என்ற கால கட்டத்தில் அடுத்து வருவது தமிழ் நாடகம் என்று அறிவித்தார்கள்.
வந்தது வந்தோம் தமிழ் நாடகத்தைப் பார்த்துச் செல்வோம் என்று பொறுமையாக நாற்காலியை பிடித்த வண்ணமிருந்தேன். துள்ளும் துள்ளலின் எதிர் அலை பூமியை ஆட்டி, நாற்காலியிலிருந்து விழுந்து விடுவோமோ என்ற பயம் தான். *கதையின் சுருக்கம் தரப்பட்டது.
விண்ணுலகத்தில் வாழும் திருவள்ளு வருக்கு ஒரு துடிப்பு ஏற்பட்டு விட்டதாம். ஓகோ துள்ளலின் அதிர்ச்சி விண்ணுலகத்தை ஆட்டி விட்டது போலும்.உடனே இறைவனிடம் எனக்கு பாரதம் செல்ல வேண்டும். நான் திருக்குறள் எழுதி பார்த மக்களிடம் கொடுத்து விட்டு வந்தேன். அது இன்னும் பாரதத்தில் உண்டா, மக்கள் அதை படித்து, செயல்பட்டு எப்படி வாழ்கின் றார்கள் என்று பார்த்து விட்டு வர வேண்டும். இதனால் ஒரு வாரத் திற்கு உத்தரவு கொடுத்தால் பாரத மண்ணிற்குச் சென்று வருகின் றேன் என்று கூறி உத்தரவுடன் பாரத மண்ணிற்கு வருகின்றார்.
காட்சி ஒன்று. திருவள்ளுவர் அழகாக அமர்ந்து, தனக்கு ஞாபகம் உள்ள திருக்குறளை சொல்லிக் கொண்டிருக்கின்றார். ஒரு பொடியனும், அவன் தந்தையும் வருகின்றார்கள். திருவள்ளுவரின் கொண்டை, பொடியனின் கவனத்தை ஈர்த்தது. அவர்கள் பேசுவது திருவள்ளுவருக்குப் புரியவில்லை, திருவள்ளுவர் பேசுவது இவர் களுக்குப் புரியவில்லை. காரணம் இவர்கள் பேசுவது சென்னைத் தமிழ். திருவள்ளுவர் பேசுவது
செந்தமிழ்... இவர் இவர்களிடம் பாரதத்தில் பல இடங்களை எனக்குக் காட்டுங்கள் என்று கேட்க, திருவள்ளுவரைக் கூட்டிக் கொண்டு பாரதத்தில் நடக்கும் பல காட்சிகளைக் காட்டினார்கள்.
ஆழ்ந்து சிந்தித்த என் சிந்தனை எங்கேயோ சென்றது. 2000 வருடத்திற்கு முன்பும், ஆரம்ப காலத்திலும், பாரதத்தில் வாழ்ந்த அத்தனை நல்லவர்களும், பெரிய வர்களும், ஞானிகளும், முனிவர் களும், திரும்பி வந்தால் பாரதத்தைப் பார்த்துச் சிரிப்பார்களா? இல்லை கண்ணீர் விடுவார்களா? இன்றைய பாரதத்தை அடையாளம் கண்டு கொள்வார்களா என்ற கேள்வி என் மனதில் தோன்றியது.
ஒரு நிமிடத்தில் காந்தி வந்தார். பல முனிவர்கள் வந்தார்கள். கண்ணன், கிருஷ்ணா, ஏசு பெருமான், வீரமாமுனிவர், பெரியார், யார் யாரோ வந்து விட்டார்கள். இவர்கள் எல்லாரும் பார்த்து விட்டு இது அல்ல கடவுள் படைத்த பூமி. இதற்கு ஒன்றே ஒன்றுதான் செய்ய முடியும். மனிதநேயம் உள்ள மக்களைப் பிரித்து எடுத்து விட்டு. விண்ணுலகத்திலிருந்து ஒரு எரிமலையை அனுப்பி, எல்லா எதிர் அலைகளையும் பொசுக்கி விட்டு, இனி புதிய பூமி, புதிய வானத்தை நாம் துவங்க வேண்டும் என்று அவர்கள் திட்டம் தீட்டுவதாக என் சிந்தனையில் கேட்டது.
அப்பா! என் தலை வெடிக்கிறது என்று தன் உணர்வுக்கு வந்த நான். திருவள்ளுவரைப் பார்த்தேன். அவர் ஆண்டவனே பாரதத்தை காப்பாற்று, தமிழ் மொழியைக் காப்பாற்று, தமிழ் மக்களை உன் கரத்தில் வைத்திருக்கின்றேன் என்று கூறி "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே என்று கூறிச் சென்றார்.
அப்பா கடவுளே பாரதத்தை மட்டும் அல்ல, உலகத்தையே உன் கையில் தருகின்றேன். உலகத்தையும், மக்களையும் காப்பாற்று என்று கூறினேன்.
பின் பக்கத்திலிருந்த மாணவ னிடம், தமிழ் நாடகத்தை எழுதியவர் யார் என்றேன். எங்கள் தமிழ் ஆசிரியர் Rev. Father என்று பெயர் கூறினான்.
இல்லை தம்பி, அவர் கண்டிப்பாக இதை எழுதியிருக்க மாட்டார். ஏனென்றால் என் பேரன் இந்தப் பள்ளியில் படிக்கின்றான். அவன் கையில் "ஆங்கிலம் கற்பது எளிது" என்று அவர் எழுதிய புத்தகம் இருந்தது. அதன் மூலம் எளிதாக ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கு.... தமிழ்ப்பற்று எப்படி இருக்கும்?? அவருக்கு மொழியில் பற்றுதலா? இல்லை தமிழில் பற்றுதலா? ஏதோ ஒரு குழப்பம். சரி போகட்டும். நல்ல சிந்தனை தான் என்று கூறி வீடு வந்து சேர்ந்தேன். பேரனும் வந்து சேர்ந்தான்.
அவன் படிப்பது English Medium. என்ன செய்வது பெற் றோர்களின் ஆசை. திருவள்ளுவர் தான் அவர்களுக்குப் புத்தி கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

உன்னை நீயே கவனி

உன்னை நீயே கவனி ஒரு மன்னரின் ரதம் இமயமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாழ்வை வெறுத்த அவருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு மனிதர்...