Thursday, February 24, 2022

சற்று சிந்திப்போம்

 MM OCTOBER 2001

சற்று சிந்திப்போம்
குளத்து பஸ்நிலையம் முழுவதும் ஒரே தலைகள்! கலர் கலரான, விதவிதமான சிறப்புச் சேலைகள்! நிறைய பஸ்களுக்குப் புது உற்சாகம்! ஏனென்றால் "சிறப்புப் பேருந்து” (Special Bus) என்ற தலைப்பில் இங்கும், அங்கும் ஓடிக் கொண்டே இருந்தன.
பஸ் நிலையத்திற்கு வந்த ஒரு பெரியவர், "என்ன விஷயம்? என்றார். 'சார்! மண்டைக்காடு திருவிழா, சார்!" என்றேன். பெரியவர் பஸ்சில் ஏறினார். ரூபாய் இரண்டை நீட்டினார். டிக்கட் இரண்டு ரூபாய் 50 பைசா சார்!" என்றார் கண்டக்டர். “ஏன்?” என்று கேட்டார் பெரியவர். "இது சிறப்பு பேரூந்து சார்; இல்லை என்றால் இறங்கி சாதாரண பஸ்சில் வாருங்கள்!" என்றார் நக்கலாக கண்டக்டர்
காசு போனாலும், இன்று வீடு போய்ச் சேர வேண்டுமே என்று ஒரு கால் உள்ளேயும், ஒருகால் படிக்கட்டிலுமாக, ஆட்கள் நிற்க சக்கரங்கள் உருண்டன.
"தம்பி! கொஞ்சம் எழும்பி, இந்தப் பாட்டிக்கு இடம் கொடு!" என்று ஒரு தாய் உள்ளம் கேட்டது. இந்த வயதில் ஏன் பாட்டி திருவிழாவுக்கு வருது? வீட்டில் இருக்க வேண்டியது தானே?" என்று ஒருவன் சொன்னதும்....
'கொல்' என்று ஒரு சிரிப்பு பையன்கள் மத்தியில். ஒவ்வொரு திருப்பத்திலும்
ஏக ஜாலி இளைஞர் கூட்டத்திற்கு.
திடீரென்று, ஏமாம்மா! காலைப்போட்டு மிதிக்கிறே? ஒரு இடத்தில் நிற்க வேண்டியது தானே? என்ற குரல், சண்டை ஆரம்பித்தது. உச்சக்கட்டத்திற்குப் போனது.
பெண்கள் சண்டை ஆண்கள் பக்கம் திரும்பியது. இது தானே சந்தர்ப்பம்?
"தொட்டு, தடவி கிட்டு வரானுங்க. அரசாங்கம் சிறப்பு பஸ், பெண்களுக்குத் தனியா, ஆண் களுக்குத் தனியா போட வேண்டியது தானே?காசு மட்டும் கூட வாங்கத் தெரியுது?" என்றார் பெரியவர்.
"ஏம்பா! கண்டக்டர்? நீயாவது ஒரு பக்கம் நின்னு டிக்கட் கிழிக் கிறதுதானே? சும்மா இங்கும் அங்கும் போயி ரவுசு பண்றியே...
இப்படிச் சண்டை, சச்சரவு கூடி, சப்தமும் கூச்சலும் கூடி, பையன்கள் ஒரு பக்கம் கூச்சலிட பெண்கள் மறுபக்கம் சத்தம் போட அப்பாடா, வந்தது கோவில்!
கூட்டம், கூட்டம்! எங்கு பார்த்தாலும் கூட்டம்!
சாமி கும்பிடும்போது என்மனம் கேட்டது: சாமி உம்மை கும்பிடத்தானே
நாங்கள் எல்லோரும் வந்தோம்? பின் ஏன் இந்தச் சண்டை சச்சரவு? ஒரு வயதான பாட்டிக்கு எழும்பி இடம் கொடுக்க மறுக்கும் இளைஞர் கூட்டம் என்ன மனநிலையில் சாமி கும்பிடும்?
அன்பு, மரியாதை தெரியாத எங்களுக்குப் பின் ஏன் இந்த சிறப்பு பஸ்? திருவிழா? எதற்காக இத்தனை அடி,மிதி, வசவு வாங்கி உன்னைத் தரிசிக்க வேண்டும்? இப்படி இடி, அடி வாங்கினால் தான் நீ எங்களை ஆசீர்வதிப்பியா?
ஓ! அம்மனே! நீ என் உள்ளத்தில் இல்லையா? வீட்டிலிருந்து கும்பிட்டால் என்னை ஆசீர்வதிக்க
மாட்டியா?...
என்று பல சிந்தனைகளும், கேள்விகளும் என் மனதில் ஓடின. அமைதியானேன்.
அம்மன் கோவிலில் மணி அடித்தது. 'நான் உன் உள்ளத்தில் உண்டு, மகளே!' என்று கூறுவது போன்ற ஒலியாக அந்தச் சப்தம் என் செவியில் கேட்டது.
என் உள்ளத்தில் இருக்கும் என் அம்மனை நான் கண்டு கொண்டேன் என்ற மகிழ்ச்சி என் உள்ளத்தை நிரப்பியது.
இனி வேண்டாம், இந்தக் கும்பலும், இடியும் மிதியும்!!! ஆனந்தி

No comments:

Post a Comment

Master Dang Philosophy 101-Q3

Some Reflections  English - When we really practice what we learn and act on it, everything changes.   - If we give our full eff...