MM - YEAR NOVEMBER 2001
'ஆசிரியரின் சிந்தனையிலிருந்து...
"பாரதமே உலகின் ஆன்ம குரு". இந்த நாட்டிலிருந்துதான் கடல்பொங்கி எழுந்தாற்போல ஆன்மீகமும், தத்துவ ஞானமும் அலை, அலையாகச் சென்று மீண்டும், மீண்டும் உலகினை மூழ்கடித்துள்ளன.
அப்படி இருக்க இந்தப் புண்ணிய பூமியில் ஏன் இன்று இத்தனைக் குழப்பங்கள்? குழப்பத்திற்கு எல்லாம் மூலகாரணம் ஆன்மீகக் குறைவுதானே? நாம் எப்படி ஆன்மீகத்தில் குறைந்து விட்டோம் என்று சிந்திக்க உங்களை அழைக்கின்றேன்.
விஞ்ஞானம் வளர்ந்து - அறிவை வளர்த்து மெய்ஞானத்தை மறைத்து
விட்டதா?
நம் முன்னோர்கள் நம்மிடம் கொடுத்துச் சென்ற ஞானத்தை மூட நம்பிக்கைகள் என்று வளர்ந்த விஞ்ஞானம் நம்மை மூட விசுவாசத்தில் கொண்டு நிறுத்தி விட்டதா...?
விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து - அறிவை வளர்த்து - கல்வியை
உயர்த்தி -மனித வாழ்க்கையைத் தரை மட்டம் ஆக்கி விட்டதா?
வாழ்வுக்கும் - வாழ்கின்ற உயிருக்கும் அர்த்தம் இல்லாமல் செய்து
விட்டதா?
அமைதியை இழந்து, உள்நாட்டு, வெளிநாட்டுச் சண்டையிலும் இன்று
மாட்டித் தவிக்கின்றோமே! எப்படி? நம்முள் இருக்கும் இறைவனைக் காண மறந்து விட்டு, அவனைச்
சாகடித்துவிட்டு, முழு மனிதனாக வாழ்க்கை நடத்துவது தான் காரணமா? ஆன்மா, ஓர் உடலை எடுத்தது அது செய்ய வேண்டிய வேலையை உலகில் செய்வதற்காகத்தான். அது செய்ய வேண்டிய வேலையை மறந்து, பணமே என் வாழ்க்கையின் குறிக்கோள்; பணம் தான் இன்று என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கொடுக்கவல்லது என்று, அதை எந்த நிலையிலும் சம்பாதிப்பது - அதற்காக எதையும் செய்வதுதான் நம் வாழ்க்கையின் குறிக்கோள் என மாற்றி - "மனித தெய்வமாக மாற வேண்டிய நாம், மனித - மிருகமாக" மாறி விட்டோமோ?
அமைதி, அன்பு, மகிழ்ச்சியைக் கொடுக்கவே நான் உலகத்திற்கு வந்தேன் என்று கூறிய ஏசுபிரானின் பிறந்த நாளை உலகமே கொண்டாட காத்திருக்கும் இந்தத் தருணத்தில் - நாம் இழந்த அமைதியை, அன்பை, சமாதானப் புறாவிடம் மீண்டும் பெற்று, நம் உள்ளத்திலும், வீட்டிலும், நாட்டிலும் நிரப்பிக் கொள்வோம். அன்பிலிருந்து உருவான நாம் அன்பையே எல்லாருக்கும் பகிர்ந்து கொடுப்போம். மீண்டும் அமைதியை நிலைநாட்டி - மகிழ்ந்து வாழ்வோம். அமைதி இறைவன் நம் எல்லாரையும் ஆசீர்வதிக்கட்டும்.
ஆசிரியர்
No comments:
Post a Comment