MM- DECEMBER 2001
உம் குடும்பம்
திருக்குடும்பமா?
"சிறு குடும்பங்கள் திருக் குடும்பங்கள் ஆகட்டும்" என்று ஒரு வீட்டு கிறிஸ்மஸ் குடிலில் எழுதி ஒட்டி இருந்தது. அது எப்படி ஆக முடியும் என்றது என் உள்ளம்.
“திருக்குடும்பத்தை” உருவாக்கு வது தாயா? இல்லை தகப்பனா? என்ற கேள்வி என் மனதில் தோன்றியது. அந்தக் குடிலில் இருந்த தாயை உற்று நோக்கினேன். என்னைப் போல நீயும் ஒரு தாயாக இரு" என்று என்னிடம் பேசியது:
"நிறை மாதத்தில் கழுதையின் மேல் ஏறி இரண்டு நாட்கள் பயணம் செய்தேன். இடம் இல்லாமல், இந்த மாட்டுத் தொழுவில் பெற்றேன் என் பிள்ளையை. ஆசைக் கனவுகள் பல வைத்திருந்தேன். அது தெய்வத்தின் சித்தம் அல்ல என்பதை உணர்ந்தவுடன், சகிப்புத் தன்மை வந்தது. பயணமும், இந்த இடமும் துன்பமாக மாற வில்லை. பயணத்தில் என் பிள்ளைபட்ட துன்பமும், அதன் உடல் வலியும் எனக்கு அதிகமாகத் தெரிந்ததால் என் வலி எனக்குத் தெரியவில்லை....
இடத்திற்காக என் கணவர் அலைந்தார். வசதி இல்லை. பிள்ளை பெற்ற எனக்குப் போதிய
உணவும் இல்லை. இரை தேடி அலைந்தால், ஒரு வேளை தெருவில் பெற்று, பிள்ளை பெயர் கெட்டு விடுமோ என்று ஒரு நிழலை தேடினேன். எதற்கு? இந்தக் குழந்தையின் தனித்தன்மைக்காக. குழந்தையின் பெயர், பின்னால் நம்மால் கெட்டு விடுமோ என்ற எண்ணத்தால் என் வசதி பெரியதாகத் தோன்றவில்லை.....
வானதூதர்கள் என்னைப் புகழ்ந்து பாடவில்லை. குழந்தையைப் பாராட்டிப் பாடினார்கள். ஆனால் என் உள்ளம் சந்தோஷத்தில் நெகிழ்ந்து கொடுத்தது. இனி என் பிள்ளையின் சந்தோஷம் தான் என் சந்தோஷம் என்று நான் நினைத்தவுடன் “தான்" என்ற என் தன்மை எங்கேயோ பறந்து விட்டது. இனி நான் வாழ்வது என் கணவருக்கும், என் பிள்ளைக்கும் தான் என்ற குறிக்கோள் என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தது. அப்பொழுது என் சிறு குடும்பம் திருக்குடும்பமாக மாறியது.....
என்னை உற்று நோக்கும் தாயே! பெண் முழுமை அடைவது அவளுடைய தாய்மையில். தாய்மையின் மறுபக்கம் தியாகம். இதை உன் மனதில் வைத்துக் கொள்.
அப்பொழுது உன் சிறு குடும்பம், திருக்குடும்பமாக மாறும்...."
என் கணவரும், குடிலை உற்று நோக்கியவராக இருந்தார். "போதும், போதும் வாருங்கள் உள்ளே போவோம்" என்றேன்.
"இவர்கள் வீட்டுக் குடிலில் ஒரு சக்தி இருக்கின்றது. இங்கு இருக்கும் சுரூபங்கள் பேசுகின்றன" என்றார். என் உணர்வை அடக்கிக் கொண்டு, "உங்களிடம் என்ன பேசுகின்றன? என்றேன். 'இது தானே பெண்களின் புத்தி்" என்றார். "சும்மா சொல்லுங்களேன்? சிறு குடும்பங்கள், திருக் குடும்பமாக மாறத் தந்தையின் பொறுப்பை எனக்கு எடுத்துச் சொல்லியது"
"விளக்கமாக சொல்லுங்களேன்"
"நிறை மாசமான தன் அன்பு மனைவியைக் கழுதையின் மேல் ஏற்றி, தான் நடந்து வந்த நேரத்தில், தன் உள்ளத்தில் தான் பட்ட வேதனையைச் சூசையப்பர் என்னிடம் கூறினார். மனைவியும், பிள்ளையும் தன் சிந்தனையில் இருந்ததால் தன் கால்வலியை அவர் உணரவில்லை என்றார்.....
இன்று இத்தனை வசதிகள் இருந்தும், பிரசவத்திற்காக உன்னைத் தனியாக அறைக்கு அழைத்துச் சென்ற பொழுது, அறைக்கு வெளியே காத்து நின்ற உணர்வுகள் என் மனதில் தோன்றின. என் மனைவிக்குக் கஷ்டமில்லாமல் சுகப் பிரசவம் கிடைக்க வேண்டும் என்ற உணர்வைத் தவிர, என்னைப் பற்றிய எந்த உணர்வும் எனக்கு இல்லாமலிருந்தது.....
பிள்ளை பிறந்து விட்டது என்ற குரல் கேட்ட பிறகுதான் என்ன பிள்ளை என்று கேட்டேன். ஆண் பிள்ளை என்றதும் ஒரு பக்கம் சந்தோஷம், மறுபக்கம் என் மனைவி எப்படி இருக்கின்றாளோ என்ற தவிப்பு. மாட்டுத் தொழுவில் துணையின்றித் தனித்து நின்ற தன் மனைவிக்கு, சூசையப்பர் எவ்வளவு துணையாக நின்றிருப்பார் என்று உணர்ந்தேன்.....
இதை நான் செய்யவில்லையே என்ற உணர்வு வந்தது அடுத்த முறை உன் பக்கத்திலேயே நிற்பேன் என்றேன். சூசையப்பர் சுருக்கமாக உன் மனைவியை நீ சந்தோஷப்படுத்து, உதவி செய், துணை நில், அவளைத் திருப்தி படுத்து, மதித்து நடந்து கொள். உன் உள்ளத்தில் முதல்இடம் கொடு. அவள் உன் குடும்பத்தைத் திருக்குடும்பமாக மாற்றுவாள் என்று கூறி முடித்தார்....."
அப்படின்னா இனி நமக்குத் தனி மரியாதை, அன்பு என்று சொல்லுங்க..."
உண்மைதான். வார்த்தை, நம் குடும்பத்தில் இனி குடிலின் பிரதிபலிக்கப்படும்" என்றார்.
"இதுதான் உண்மையான கிறிஸ்மஸ். என் வாழ்க்கையில், இந்தக் குடில் தந்த கிறிஸ்மஸ் பரிசு" என்று என் தலையை அவர் தோளில் சாய்த்தேன்.
"வளர்க சிறு குடும்பங்கள், திருக்குடும்பங்களாக!"
உங்களுக்கு எங்கள் கிறிஸ்மஸ்
வாழ்த்துக்கள்
.ஆசிரியர்
No comments:
Post a Comment