உன்னை நீயே கவனி
ஒரு மன்னரின் ரதம் இமயமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாழ்வை வெறுத்த அவருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு மனிதர் மரத்தடியில் தியானத்தில் இருந்தார். எளிமையான அவரது முகம் தாமரை போல மலர்ந்திருந்தது கண்டதும் அவர் ரதத்தை நிறுத்தினார். கண்களைத் திறந்த அந்த மனிதர், 'என்ன வேண்டும்?' எனக் கேட்டார். "காசியின் மன்னர் நான்! செல்வம் எல்லாம் இருந்தும், ஏதுமில்லாதது போல மனம் வாடுகிறேன். எளிமையாக இருந்தாலும் உங்களின் பிரகாசமான முகம் என்னை ஈர்க்கிறது. சாக முடிவெடுத்த நிலையிலும், உங்களிடம் சற்று நேரம் பேசத் தோன்றுகிறது. அதனால் நின்று விட்டேன்" என்றார் மன்னர். மன்னரின் பேச்சைக் கேட்டாலும், அந்த மனிதரின் பார்வை முழுவதும் மன்னரின் கால்களை நோக்கியிருந்தது. மன்னருக்குச் சிறுவயது முதல் கால் களை ஆட்டும் பழக்கம் உண்டு. அந்த மனிதர் தனது கால்களையே பார்க்கிறார் என்பதை அறிந்ததும் சட்டென அசைப்பதை நிறுத்தினார் மன்னர். "மன்னா! எவ்வளவு காலமாக இந்த பழக்கம் உள்ளது?" எனக் கேட்டார் அவர். 'நினைவு தெரிந்த நாள் முதல்..." என்றார். "இப்போது ஏன் நிறுத்தி விட்டாய்?" என்று கேட்டார் அவர். " நீங்கள் என் கால்களையே உற்று கவனித்தீர்கள்" என்றார். "பார்த்தாயா! மற்றவர் உன்னைக் கவனிக்க வேண்டுமென கருதுகிறாய். பிறரைச் சார்ந்தே வாழ ஆசைப்படுகிறாய். உலகத்தைப் பற்றி கவலைப்படாதே . உன் கால்களை நான் கவனித்ததால், நீண்டநாள் பழக்கத்தைக் கூட நிறுத்தி விட்டேன் என்கிறாய். இனி உன்னை நீயே கவனிக்க தொடங்கு. எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பது தெரிய வரும்" என்றார். மன்னரின் மனதில் ஒளிக்கீற்று படர்ந்தது. பணிவோடு, "தாங்கள் யார்?" என்று கேட்டார். "புத்தர்" என்றார் அந்த மனிதர் காலில் விழுந்து வணங்கினார். தன்னைத் தானே கவனிப்பதே வாழும் கலை என்பதை அறிந்ததும், மன்னரின் ரதம் அரண்மனை நோக்கி திரும்பியது
No comments:
Post a Comment