Sunday, April 7, 2024

உன்னை நீயே கவனி

உன்னை நீயே கவனி

ஒரு மன்னரின் ரதம் இமயமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாழ்வை வெறுத்த அவருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு மனிதர் மரத்தடியில் தியானத்தில் இருந்தார். எளிமையான அவரது முகம் தாமரை போல மலர்ந்திருந்தது கண்டதும் அவர் ரதத்தை நிறுத்தினார். கண்களைத் திறந்த அந்த மனிதர், 'என்ன வேண்டும்?' எனக் கேட்டார். "காசியின் மன்னர் நான்! செல்வம் எல்லாம் இருந்தும், ஏதுமில்லாதது போல மனம் வாடுகிறேன். எளிமையாக இருந்தாலும் உங்களின் பிரகாசமான முகம் என்னை ஈர்க்கிறது. சாக முடிவெடுத்த நிலையிலும், உங்களிடம் சற்று நேரம் பேசத் தோன்றுகிறது. அதனால் நின்று விட்டேன்" என்றார் மன்னர். மன்னரின் பேச்சைக் கேட்டாலும், அந்த மனிதரின் பார்வை முழுவதும் மன்னரின் கால்களை நோக்கியிருந்தது. மன்னருக்குச் சிறுவயது முதல் கால் களை ஆட்டும் பழக்கம் உண்டு. அந்த மனிதர் தனது கால்களையே பார்க்கிறார் என்பதை அறிந்ததும் சட்டென அசைப்பதை நிறுத்தினார் மன்னர். "மன்னா! எவ்வளவு காலமாக இந்த பழக்கம் உள்ளது?" எனக் கேட்டார் அவர். 'நினைவு தெரிந்த நாள் முதல்..." என்றார். "இப்போது ஏன் நிறுத்தி விட்டாய்?" என்று கேட்டார் அவர். " நீங்கள் என் கால்களையே உற்று கவனித்தீர்கள்" என்றார். "பார்த்தாயா! மற்றவர் உன்னைக் கவனிக்க வேண்டுமென கருதுகிறாய். பிறரைச் சார்ந்தே வாழ ஆசைப்படுகிறாய். உலகத்தைப் பற்றி கவலைப்படாதே . உன் கால்களை நான் கவனித்ததால், நீண்டநாள் பழக்கத்தைக் கூட நிறுத்தி விட்டேன் என்கிறாய். இனி உன்னை நீயே கவனிக்க தொடங்கு. எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பது தெரிய வரும்" என்றார். மன்னரின் மனதில் ஒளிக்கீற்று படர்ந்தது. பணிவோடு, "தாங்கள் யார்?" என்று கேட்டார். "புத்தர்" என்றார் அந்த மனிதர் காலில் விழுந்து வணங்கினார். தன்னைத் தானே கவனிப்பதே வாழும் கலை என்பதை அறிந்ததும், மன்னரின் ரதம் அரண்மனை நோக்கி திரும்பியது

கதை கூறும் பாடம்

 கதை கூறும் பாடம் 


ஒரு நாட்டின் மன்னன் நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத் தெருவி ல் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் 'மந்திரியாரே இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விட வேண்டும் போல் தோன்றுகிறது” என்றான். அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்! அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாக வியாபாரம் நன்றாக நடக்கிறதா? என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்! 'என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்! சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்! நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால், யாரும் வாங்குவது தான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன். அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! 'இந்த நாட்டின் அரசன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்" என்றான் கடைக்காரன்! அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது. இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி. அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கி எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று நீங்கள் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் உங்களுக்கு இதைப் பரிசாக வழங்கினான் என்று கூறி அதை அரசனிடம் தந்தான்! அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்! அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்! அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்! அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்! அந்தப் பொற்காசுகளால் அவனது வறுமை தீர்ந்தது! இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்! அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்! குரு சிஷ்யர்களைக் கேட்டார் 'சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன?” என்றார். பல சீடர்கள் அதற்கு பலவிதமாக 'கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்” என்றெல்லாம் பதில் கூறினார்கள்!! குரு பலமாகத்


தலையை உலுக்கிக் கொண்டே கூறினார் 'இல்லை இல்லை கர்மா என்பது நமது


எண்ணங்களே”. நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை


வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறு ஏதேனும் வழியில்


சாதகமாகத் திரும்பி வரும்! நல்லதையே சிந்திப்போம் நல்லதே நடக்கட்டும்

மனித பிரபஞ்ச சக்தி தியானம்

 அன்புள்ள சகோதர சகோதரிகளே நமஸ்தே! நாம் அனைவரும் உடல் அளவிலும் மன அளவிலும் ஆன்ம அளவிலும்  நலமாக இருக்கிறோமா என்று சிந்தித்து பார்க்க வேண்டுகி...